UPDATED : ஜூலை 27, 2025 12:00 AM
ADDED : ஜூலை 27, 2025 09:19 AM

சண்டிகர்:
ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், பொதுத் தகுதித் தேர்வு பலத்த பாதுகாப்புடன் நேற்று துவங்கியது. இன்றும் தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுதும், 834 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹரியானா அரசில், குரூப் -சி பதவிகளுக்கான பொதுத் தகுதித் தேர்வு நேற்று துவங்கியது. தேர்வு இன்றும் நடக்கிறது. ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வுக்கு, 13.48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாநிலம் முழுதும், 834 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் வசதிக்காக, தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஹிம்மத் சிங், நுாஹ் மாவட்டத்தில் பல தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினார். கைத்தால் சப் - கலெக்டர் பிரீத்தி, போலீஸ் எஸ்.பி., அஸ்தா மோடி ஆகியோர் சிறப்பு பஸ் இயக்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.
தேர்வு மையத்தில் இருந்து, 200 மீட்டர் சுற்றளவில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தேர்வு மையங்களுக்கு அருகிலுள்ள ஜெராக்ஸ் மற்றும் அச்சகங்களையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், பொதுத் தகுதித் தேர்வு நடக்கும் இரண்டு நாட்களும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
தேர்வர்களுக்கு இடையூறு இல்லாத போக்குவரத்து இயக்கத்தை எளிதாக்க முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.