அரசு உத்தரவை மீறி வார விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்: குறட்டை விடும் கல்வித்துறை
அரசு உத்தரவை மீறி வார விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள்: குறட்டை விடும் கல்வித்துறை
UPDATED : பிப் 25, 2025 12:00 AM
ADDED : பிப் 25, 2025 09:33 AM

புதுச்சேரி :
கல்வித்துறையின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு, சில தனியார் பள்ளி கள் ஞாயிற்றுகிழமையான நேற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி களும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 15ம் தேதியும், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையை பின்பற்றி வருகின்றன.
இவர்களுக்கு பிளஸ் 2பொதுத்தேர்வு வரும் 3ம் தேதி துவங்கி 25ம் தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 5ம் தேதி துவங்கி 27ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சில தனியார் பள்ளிகள் மாலை நேரத்தில் வெகு நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாகவும், விடுமுறை நாட்களிலும் பள்ளிகள் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கடந்த ஜன. 30ம் தேதி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், சில தனியார் பள்ளிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குமேல் வகுப்பு நடத்துவதாகவும், வார இறுதி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத் துவதாக தகவல் வந்துள்ளது.
இத்தகைய நடைமுறை மாணவர்களுக்கு தேவையற்ற மன மற்றும் உடல் அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு போதுமான ஓய்வு, பொழுதுபோக்கு, வளர்ச்சிக்கான வாய்ப்பை பறிக்கிறது. மாணவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய கல்வி விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
எனவே, தனியார் பள்ளி கள் வேலை நாட்களில் மாலை 6:00 மணிக்கு மேல் கல்வி அல்லது கல்வி சாரா வகுப்புகளை நடத்தக்கூடாது.
வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்''என கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் வார விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன. பொது தேர்வு நடக்கிறது, பயிற்சி தேவை என பள்ளி நிர்வாகத்தின் நிர்பந்தத்தால், பெற்றோர்களும் வேறு வழியின்றி மாணவர்களை அனுப்பி வைக்கின்றனர்.
இவ்வாறு வாரத்தின் 7 நாட்களும் பள்ளிகளை நடத்தினால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். எனவே, விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கல்வித்துறையிடம் கேட்டபோது, பதில் தர மறுத்துவிட்டனர்.
அரசு மருத்துவமனை உளவியல் நிபுணர்கள் கூறுகையில், தேர்வு நேரத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாக படிக்கும்போது பயம், பதற்றம் ஏற்படும். பயம் பதற்றம் ஏற்பட்டால், படித்தது நினைவிற்கு வராது. சரியான ஓய்வு, துாக்கம் இருந்தால் தான் ஞாபக சக்தி சரியாக இருந்து படித்தது நினைவுக்கு வரும். அதிக நேரம் கண் விழித்திருக்கவும் கூடாது.
அரசு நிர்ணயித்த கால அட்டவணைப்படி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். 24 மணி நேரமும் படிக்க விரும்பும் மாணவரை வரவழைத்து பயிற்சி கொடுத்து கொள்ளலாம். விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைத்து வகுப்பு நடத்துவது தவறனாது. இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும் என்றனர்.