பள்ளிகளில் சிறப்பு தூய்மை பணி: பள்ளிக் கல்வித்துறை அறிவுரை
பள்ளிகளில் சிறப்பு தூய்மை பணி: பள்ளிக் கல்வித்துறை அறிவுரை
UPDATED : செப் 25, 2026 10:09 AM
ADDED : செப் 25, 2026 10:10 AM
சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதன்கிழமைதோறும் சிறப்பு துாய்மை பணிகள் மேற்கொள்ள, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு புதன்கிழமையும், 'மாபெரும் துாய்மை புதன்கிழமை' என்ற பெயரில், சிறப்பு துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதை ஒரு தொடர்ச்சியான இயக்கமாக மாற்ற வேண்டும். மொட்டை மாடி, படிக்கட்டு, படிக்கட்டு பின்புறம், கழிப்பறை, சுற்றுச்சுவர் ஓரங்கள், சமையல் அறை, குடிநீர் வசதி அமைந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளி வளாகங்களில் நீர் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதன்கிழமையன்று தேவையற்ற கழிவுகளை அகற்ற வேண்டும்.
புதர் மற்றும் தேவையற்ற செடிகள் அதிகமாக வளர்ந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆபத்தான துாய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
