UPDATED : ஜன 06, 2025 12:00 AM
ADDED : ஜன 06, 2025 06:56 AM
சென்னை:
பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு மலரை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், 2024 ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை நடத்திய மாநாட்டில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆற்றிய உரைகள், ஆதினங்களின் ஆசியுரைகள், வெளிநாட்டினரின் கட்டுரைகள், விருது பெற்றவர்களின் சிறப்புகள், ஆய்வரங்கில் வாசித்ததில் சிறந்த கட்டுரைகள், பேச்சாளர்களின் வாழ்த்துரைகள் போன்றவை அடங்கிய சிறப்பு மலரை, அறநிலையத்துறை தயாரித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முருகன் மாநாடு சிறப்பு மலரை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தலைமை செயலர் முருகானந்தம், அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிபிரியா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.