UPDATED : அக் 18, 2025 10:14 AM
ADDED : அக் 18, 2025 10:15 AM
புதுடில்லி:
அரசு முறைப் பயணமாக புதுடில்லி வந்துள்ள, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, ரோஹிணி சி.எம். ஸ்ரீ பள்ளியை நேற்று பார்வையிட்டார்.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புதுடில்லிக்கு நேற்று முன் தினம் வந்தார். புதுடில்லியில் தான் படித்த டில்லி பல்கலையின் ஹிந்து கல்லூரிக்கு நேற்று முன் தினம் வந்த அவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடினார்.
இந்நிலையில் நேற்று காலை, ரோஹிணியில் அமைந்துள்ள சி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு வந்தார். வகுப்பறைகள், உள்கட்டமைப்பு, கற்பித்தல் முறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். டில்லி அரசின் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.
ஆசிரியர்களுக்கான பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்டவை குறித்து ஆஷிஷ் சூட் மற்றும் ஹரிணி ஆகியோர் விரிவாக விவாதித்தனர். அப்போது, டில்லி- - கொழும்பு கல்வி பாலம், மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், பள்ளி வடிவமைப்பு ஆகியவை குறித்தும் ஆலோசித்தனர்.
அதைத் தொடர்ந்து, சர்வோதயா இருபாலர் பள்ளியையும் அமரசூரியா பார்வையிட்டு, மாணவ - மாணவியருடன் உரையாடினார்.