தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஏவி ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை

புதிய தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஏவி ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை

புதிய தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஏவி ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை


UPDATED : மே 04, 2026 04:30 PM

ADDED : மே 04, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2026 04:30 PM ADDED : மே 04, 2026 04:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுடன் உருவான 'கேலக்ஸ் - ஐ' எனும் விண்வெளி துறையைச் சேர்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், புவியை கண்காணிப்பதற்காக உலகிலேயே முதல் ரேடார் மற்றும் கேமராவை இணைத்த 'ஆப்டோசார்' தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக்கோளை நேற்று விண்ணுக்கு அனுப்பியது. அமெரிக்காவின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் மூலம் இது ஏவப்பட்டது.

நம் விண்வெளி துறை நீண்ட காலமாக இஸ்ரோ எனப்படும் மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. ஆனால் , கடந்த சில ஆண்டுகளில், மத்திய அரசின் கொள்கை மாற்றங்கள் காரணமாக தனியாருக்கு விண்வெளி துறை திறக்கப்பட்டுள்ளது.

இதற்காக, 'இன் ஸ்பேஸ்' எனும் அமைப்பு கடந்த 2020ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, வழிகாட்டுதல், உட்கட்டமைப்பு அணுகல் போன்றவற்றை வழங்குகிறது.

அதே போல், 'நியூஸ்பேஸ் இந்தியா' எனும் நிறுவனம் செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்ட பணிகளுக்கு உதவுகிறது. குறைந்த செலவில் உயர்தர சேவைகளை வழங்கும் நம் நாட்டு விண்வெளி துறையின் திறன் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், 2021ல் சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் சிலர் இணைந்து, 'கேலக்ஸ் - ஐ' என்ற பெயரில் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கினர்.

நவீன தொழில்நுட்பம்

இந்த நிறுவனத்தின் நோக்கம், விண்வெளியில் இருந்து புவியை கண்காணித்து, அதில் இருந்து கிடைக்கும் தரவுகளை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் மூலம் திறம்பட மாற்றுவது.

இந்நிறுவனம் 'திருஷ்டி மிஷன்' என்ற பெயரில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வந்தது. இந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பை படம் பிடித்து தரவு வழங்கும். அதில், உலகிலேயே முதன் முறையாக இரண்டு வகை தொழில்நுட்பத்தை ஒன்றாக பயன்படுத்தி உள்ளனர்.

ஒன்று ஒளிப்பட முறை, மற்றொன்று ரேடார் முறை. திருஷ்டி செயற்கைக்கோளில் இவை இரண்டையும் ஒன்றிணைத்துள்ளனர். அதற்கு, 'ஆப்டோசார்' என பெயரிட்டுள்ளனர்.

ஒளிப்பட முறையில் மனித கண்களால் பார்ப்பது போல் பூமியின் தெளிவான படங்கள் கிடைக்கும். ஆனால், மேக கூட்டங்கள் இருந்தால் நிலப்பரப்பு தெரியாது. ரேடார் முறையில் மேகம், மழை, இருள் இருந்தாலும் படங்கள் எடுக்க முடியும்.

ஆனால், அவை தெளிவின்றி காணப்படும். இவை இரண்டையும் ஒன்றிணைப்பதன் மூலம் அனைத்து வானிலையிலும் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

இந்நிலையில், 'ஆப்டோசார்' தொழில்நுட்பம் கொண்ட இந்திய நிறுவனமான 'கேலக்ஸ் - ஐ'யின் திருஷ்டி செயற்கைக்கோள், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இது குறித்து, ஓய்வுபெற்ற விண்வெளி நிபுணர்கள் கூறியுள்ளதாவது:

நம் நாடு வெப்ப மண்டல புவியியல் அமைப்பைச் சேர்ந்தது. இதனால், இங்கு அடிக்கடி மேகமூட்டம் நிலவும். சாதாரண ஆப்டிகல் செயற்கைக்கோள்களால் புவியின் தரைப்பகுதியை தெளிவாக படம் பிடிக்க முடிவதில்லை.

இந்திய நிலப்பரப்பில் 70 சதவீதம், கடல் பரப்பில் 90 சதவீதம் எப்போதும் மேகங்களால் மூடப்பட்டிருப்பதாக நாசா ஆய்வு தெரிவிக்கிறது.

துல்லியமான தகவல்

இதனால், சாதாரண செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்படும் 10 படங்களில் ஏழு படங்கள் மேகமூட்டமாகவே கிடைக்கின்றன. பேரிடர் மேலாண்மை, விவசாயம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு தேவையான துல்லியமான தகவல்களை பெறுவதில், இது பெரிய தடையாக இருந்து வந்தது.

இந்த சவாலை எதிர்கொள்ளவே திருஷ்டி செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் உள்ள 'எலக்ட்ரோ ஆப்டிகல்' உணர்திறன் கருவிகள் சூரிய ஒளி மற்றும் தெளிவான வானிலை நிலவும் போது உயர் ரக வண்ணப் படங்களை எடுக்கும்.

அதே நேரம், இதில் உள்ள 'சார்' தொழில்நுட்பம், ரேடார் துடிப்புகளை பயன்படுத்தி மேகமூட்டம் மற்றும் இருள் சூழ்ந்த இரவு நேரங்களிலும் தரைப்பகுதியை ஊடுருவி துல்லியமாக படம் பிடிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரதமர் மோடி பாராட்டு!

உலகின் முதல் 'ஆப்டோசார்' தொழில்நுட்பம் கொண்ட 'மிஷன் திருஷ்டி' செயற்கைக்கோள் ஏவப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இது இளைஞர்களின் கண்டுபிடிப்பு திறன் மற்றும் நாட்டை முன்னேற்றும் மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது' என கூறியுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us