ராயப்பேட்டையில் பஸ் மீது கல் வீச்சு :கல்லுாரி மாணவர்களுக்கு வலை
ராயப்பேட்டையில் பஸ் மீது கல் வீச்சு :கல்லுாரி மாணவர்களுக்கு வலை
UPDATED : டிச 12, 2025 07:54 AM
ADDED : டிச 12, 2025 07:54 AM
சென்னை:
ராயப்பேட்டையில், இரு கல்லுாரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், அரசு பேருந்து மீது கல் வீசப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், பயணியர் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
ராயப்பேட்டை, 'சத்யம்' தியேட்டர் அருகே, நேற்று காலை 10:00 மணியளவில் புதுக்கல்லுாரி மாணவர்கள் சிலர் நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகர் செல்லும் தடம் எண்: 23சி மாநகர பேருந்து வந்தது. அதில், நந்தனம் கல்லுாரி மாணவர்கள் சிலர், தாளம்போட்டு, பாட்டு பாடிய படி பயணித்துள்ளனர்.
இதை பார்த்த புதுக்கல்லுாரி மாணவர்கள், அமைதியாக செல்லும்படி மிரட்டியுள்ளனர். பதிலுக்கு, பேருந்தில் பயணித்த நந்தனம் கல்லுாரி மாணவர்களும் சத்தம் போட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த புதுக்கல்லுாரி மாணவர்கள், கற்களை எடுத்து பேருந்தில் பயணித்த நந்தனம் கல்லுாரி மாணவர்களை நோக்கி வீசியுள்ளனர். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
இதனால் பதற்றம் ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணியர் பயத்தில் அலறினர். புதுக்கல்லுாரி மாணவர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் பெருமாள், 45, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பேருந்தில் பயணித்தோர் எடுத்த வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, அண்ணாசாலை போலீசார், மாணவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால், நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணியர் மாற்றுப் பேருந்தில் ஏற்றிவிடப்பட்டனர்.

