மாணவர் - ராணுவம் மோதல்; வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்
மாணவர் - ராணுவம் மோதல்; வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்
UPDATED : ஆக 27, 2024 12:00 AM
ADDED : ஆக 27, 2024 11:41 AM
டாக்கா:
வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த பின், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், மாணவர்களுக்கும், அன்சார் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது. டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
இந்நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாக்காவில் உள்ள தலைமை செயலகம் அருகே, அன்சார் என அழைக்கப்படும் துணை ராணுவப் படையினர், சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம், இடைக்கால அரசின் ஆலோசகரும், பாகுபாட்டுக்கு எதிரான மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான நஹித் இஸ்லாம் மற்றும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிலர் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, நஹித் இஸ்லாம் மற்றும் அவருடன் சென்ற நபர்களை, அன்சார் ராணுவப் படையினர் சிறை பிடித்ததாக தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், தலைமை செயலகத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களுக்கும், அன்சார் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் இருதரப்பைச் சேர்ந்த பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இயல்புநிலை திரும்பி வந்த நிலையில், தற்போது, மாணவர்களுக்கும், அன்சார் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் உள்ள வங்கதேச துாதரகத்தில், பத்திரிகை பிரிவில் முதல் செயலராக பணியாற்றிய ஷபான் மஹ்மூத் என்பவரை பணிநீக்கம் செய்து, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நேற்று உத்தரவிட்டார். இதே போல், கோல்கட்டாவில் உள்ள வங்கதேச துாதரகத்தில் பணியாற்றிய ரஞ்சன் சென் என்பவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

