UPDATED : ஜூலை 04, 2026 11:51 AM
ADDED : ஜூலை 04, 2026 11:53 AM
மேட்டுப்பாளையம்:
காரமடை வட்டாரத்தில், இந்த கல்வி ஆண்டில், ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளன.
காரமடை வட்டாரத்தில் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய மூன்று பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த பகுதிகளில், 123 ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. கடந்தாண்டு எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 7554 சிறுவர், சிறுமியர் படித்தனர்.
கடந்த மே மாதம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அந்தந்த பள்ளியின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும்படி, பெற்றோர்களிடம் கூறி வந்தனர்.
அரசு பள்ளியில் சேரும் ஒவ்வொருவருக்கும், பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்படி கூறி வந்தனர்.
ஜூன் மாதம் பள்ளி துவங்கியதும், துவக்கப்பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளில் இருந்து, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்வதற்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சான்றிதழ் பெற்று சென்றுள்ளனர்.
இக்கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய மற்றும் நடுநிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்பு வரை, 1027 சிறுவர், சிறுமிகளும், இரண்டாம் வகுப்பில் இருந்து, எட்டாம் வகுப்பு வரை, 536 மாணவ, மாணவிகள் என, மொத்தமாக, 1563 பேர் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
ஜூன் மாதம் இறுதி வரை மொத்தமாக, 8110 மாணவ, மாணவியர் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 556 மாணவ, மாணவியர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இக்கல்வி ஆண்டில் காரமடை வட்டாரத்தில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.
