மாநகராட்சி பள்ளியில் கடகடவென வாய்ப்பாடு ஒப்புவித்தார் மாணவி
மாநகராட்சி பள்ளியில் கடகடவென வாய்ப்பாடு ஒப்புவித்தார் மாணவி
UPDATED : டிச 07, 2024 12:00 AM
ADDED : டிச 07, 2024 10:06 AM
கோவை:
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி கமிஷனர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், தொடுதிரை மூலமாக மாணவ - மாணவியருக்கு கல்வி கற்பிப்பது தொடர்பாக, ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்த கமிஷனர், மாணவ - மாணவியருடன் கலந்துரையாடினார்.
ஒரு மாணவியிடம் வாய்ப்பாடு சொல்லச் சென்னார்; அம்மாணவி, மளமளவென கூறி ஆச்சரியப்படுத்தினார். இன்னொரு மாணவன், தொடுதிரை மூலமாக ஆங்கில எழுத்துக்களை கூறினார். பள்ளியில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற அவர், பதிவேடுகளை பார்வையிட்டு, மருந்து, மாத்திரைகள் இருப்பு விபரங்களை சரிபார்த்தார். பின், சுங்கம் 'ரவுண்டானா' பகுதியில் வாலாங்குளத்தின் உபரி நீர் செல்லும் வழியில் தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்பின், வடவள்ளி வி.என்.ஆர்., நகரில் ரூ.1.48 கோடியில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.