இரண்டு கைகள் இழந்த மாணவருக்கு விரைவில் உறுப்பு மாற்று சிகிச்சை
இரண்டு கைகள் இழந்த மாணவருக்கு விரைவில் உறுப்பு மாற்று சிகிச்சை
UPDATED : மே 10, 2025 12:00 AM
ADDED : மே 10, 2025 01:45 PM
சென்னை:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, மாற்றுத்திறனாளி மாணவருக்கு, இரண்டு கைகளும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனுார் கிராமத்தை சேர்ந்த மாணவர் கீர்த்தி வர்மா, 17. சிறு வயதில் மின்சாரம் தாக்கியதில், இரண்டு கைகளையும் இழந்தார். கைகளை இழந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 471 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். தனக்கு கைகள் பொருத்த அரசு முன்வர வேண்டும் என்று, முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதை அறிந்த முதல்வர், மாணவருக்கு கைகள் பொருத்தப்படும் என, உறுதி அளித்தார். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க, அமைச்சர் சுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார். நேற்று மாணவர் கீர்த்தி வர்மா, தலைமை செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அமைச்சர் சுப்பிரமணியன், உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர், அவரின் உடல்நிலையை கேட்டறிந்தனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மாணவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில், இரண்டு கைகளையும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 2018 முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை, எட்டு பேருக்கு கைமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அனைவரும் நலமுடன் உள்ளனர்.
மேலும், 26 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இம்மாணவருக்கு செயற்கை கை பொருத்தலாமா என்று கேட்கப்பட்டது. ஆனால், கை உறுப்பு மாற்று சிகிச்சை தான் வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளார். எனவே, மாணவரின் பெயரும், கைஉறுப்பு கேட்டு பதிவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து, மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மூளைச்சாவு அடைந்தவர்களிடம், கை தானம் கிடைத்த பிறகு, மாணவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இறந்து ஆறு மணி நேரத்திற்குள், ஒருவரின் கை மற்றொருவருக்கு பொருத்த உகந்ததாக இருக்கும். எனவே, ஆனந்தம் அறக்கட்டளை உதவியுடன், சென்னை அல்லது சென்னை அருகில் உள்ள கல்லுாரிகளில், மாணவர் படிக்க உள்ளார். இதற்கான செலவை ஆனந்தம் அறக்கட்டளை நிர்வாகி செல்வகுமார் ஏற்கிறார்.
மாணவர் சென்னை அருகில் இருந்தால் மட்டுமே, உறுப்பு மாற்று சிகிச்சை பலனளிக்க கூடியதாக இருக்கும். இதற்கான செலவு, முதல்வருக்கான காப்பீட்டில் செலவிடப்படும். மாணவரின் வயதுடைய அல்லது சற்று முன், பின் வயதுடையவர்களின் கைகள் தானமாக கிடைத்தால் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

