கற்போருக்கு ஜூன் மாதம் இறுதி மதிப்பீடு விபரம் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தல்
கற்போருக்கு ஜூன் மாதம் இறுதி மதிப்பீடு விபரம் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தல்
UPDATED : ஏப் 22, 2025 12:00 AM
ADDED : ஏப் 22, 2025 09:13 AM

உடுமலை:
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கற்போர் குறித்த விபரங்களை தயார்நிலையில் வைத்திருக்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படை கற்றல் இல்லாதவர்களுக்கென, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த அரசுப்பள்ளிகள், கற்போர் மையங்களாக அமைக்கப்படுகிறது.
பள்ளியை சுற்றிலுமுள்ள கற்போரை கண்டறிந்து, தலைமையாசிரியர்கள் தன்னார்வலர்கள் வாயிலாக, அவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பிக்க வேண்டும். தன்னார்வலர்கள் வாழ்வியல் திறன் சார்ந்த அடிப்படை கற்றலை கற்பிக்க வேண்டும்.
அவர்களின் கற்றல் திறன் குறித்து, கல்வியாண்டின் இறுதியில் தேர்வு நடத்தப்படும்.கடந்தாண்டில் வாசித்தல், 50 மதிப்பெண்ணுக்கும், எழுதுதல் 50, மற்றும் கணிதம் 50 என மொத்தமாக, 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு, அரசு பள்ளிகளை மையங்களாக கொண்டு தேர்வு நடந்தது.
மையங்களுக்கு வர முடியாதவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்துக்கு பொதுவான மையம் அமைக்கப்பட்டும், வீடுகளில் அவர்களை சந்தித்தும் ஆசிரியர்கள் தேர்வு நடத்தினர்.
நடப்பாண்டில் குறிப்பிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவை அனைத்தும் நுாறு சதவீத எழுத்தறிவு பெற்றவையாக மாற்றுவதற்கு, இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அந்தந்த பகுதிகளில் உள்ள கற்போர் குறித்து, தீவிரமாக ஆய்வு நடத்தவும், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.
எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பிறமாநிலத்தைச்சேர்ந்த கற்போரும் இந்த பட்டியலில் சேர்ப்பதற்கு கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலும், அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கல்வியாண்டின் துவக்கத்தில், கற்போர் பட்டியல் தயார் செய்தனர். அவர்களுக்கான பயிற்சிகளும் தன்னார்வலர்கள் வாயிலாக வழங்கப்பட்டது.
தற்போது கல்வியாண்டு நிறைவடையும் நிலையில், அவர்களுக்கான மதிப்பீடு தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக புதிய கல்வியாண்டு துவங்கி, ஜூன் மாதத்தில் இறுதி மதிப்பீடு செய்வது குறித்து, கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அறிவித்துள்ளது.
இதற்கு அந்தந்த பள்ளிகளின் அருகில் உள்ள, கற்போர் குறித்த தகவல்களை தயாராக வைப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.