பி.இ., பி.டெக்., கலந்தாய்விற்கு காலக்கெடு நீட்டிப்பு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியால் மாணவர்கள் நிம்மதி
பி.இ., பி.டெக்., கலந்தாய்விற்கு காலக்கெடு நீட்டிப்பு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியால் மாணவர்கள் நிம்மதி
UPDATED : ஆக 13, 2025 12:00 AM
ADDED : ஆக 13, 2025 08:42 AM

புதுச்சேரி:
பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கையை செப்., 15ம் தேதி வரை நடத்திக் கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூன்று அரசு மற்றும் 10 தனியார் பொறியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடாக 4,005 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்டாக் மூலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 2025-26 கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கையை ஆக., 14ம் தேதிக்குள் முடித்து முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்க வேண்டும். அதன்பிறகு மாணவர் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து சென்டாக் நிர்வாகம் கடந்த மே 12ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்றது. அதில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள 4,005 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 6,047 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் கடந்த ஜூலை 4ம் தேதி வெளியிட்டு, ஆட்சேபனைகளை பெற்றது. இந்நிலையில், புதுச்சேரி அரசு உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, அறிவித்தது.
இதற்கான அரசாணை வெளியாவது தாமதமாகியதால், சென்டாக் நிர்வாகத்தால் கலந்தாய்வை நடத்த முடியவில்லை. இதனால், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பெரும் தவிப்பிற்குள்ளாகினர்.
ஒரு வழியாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை கடந்த 4ம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து சென்டாக் நிர்வாகம், வரைவு தரவரிசைப் பட்டியலில் பெறப்பட்ட ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்து, திருத்தப்பட்ட வரைவு தரவரிசைப் பட்டியலை கடந்த 8 ம் தேதி வெளியிட்டு ஆட்சேபனைகளை கோரியது.
இதன்பிறகு, சீட் மேட்ரிக்ஸ் வெளியிட்டு கலந்தாய்வை ஏ.ஐ.சி.டி.இ., கூறியபடி ஆக. 14ம் தேதிக்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனையொட்டி, சென்டாக் நிர்வாகம், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்கக் கோரி ஏ.ஐ.சி.டி.இ.,க்கு கடிதம் அனுப்பியது.
இதனையேற்று, சென்டாக் நிர்வாகம் பி.இ., மற்றும் பி.டெக்., முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கையை (லேட்டரல் என்ட்ரி) நடத்திட வரும் செப்., 15ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து ஏ.ஐ.சி.டி.இ., நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.
ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியால், பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு விண்ணபித்து காத்துள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் சென்டாக் நிர்வாகமும் நிம்மதியடைந்துள்ளது.
கலந்தாய்வை முடிக்க இன்னும் ஒரு மாதமே உள்ளதால், சென்டாக் நிர்வாகம் விரைவில் நீட் அல்லாத படிப்புகளுக்கான கலந்தாய்விற்கான சீட் மேட்ரிக்ஸ் வெளியிட்டு, சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.