கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியாகாததால் மாணவர்கள் தவிப்பு
கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியாகாததால் மாணவர்கள் தவிப்பு
UPDATED : மே 03, 2025 12:00 AM
ADDED : மே 03, 2025 03:59 PM
தேர்வுக்கு ஆறு நாட்களே உள்ள நிலையில், மத்திய பல்கலையில் சேருவதற்கான கியூட் நுழைவு தேர்வு அட்டவணை வெளியாகாததால், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 46 மத்திய பல்கலைகள், மாநில பல்கலைகள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைகள் என மொத்தம், 250க்கும் மேற்பட்ட பல்கலைகளில், உயர்கல்வி படிப்பதற்கான நுழைவு தேர்வான, காமன் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் எனப்படும், கியூட் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இந்த தேர்வு வாயிலாக, இளநிலை கலை அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். இந்தியா முழுதும், மூன்று லட்சம் இடங்களுக்கு ஆண்டுதோறும் 13 முதல் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இந்தாண்டுக்கான, கியூட் நுழைவு தேர்வு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 1ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடந்தது.
இந்தாண்டு, 13 மொழிப்பாடங்கள், 23 துறை தொடர்பான பாடங்கள், ஒரு பொது அறிவுத்தேர்வு என மொத்தம், 37 தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் மே 8ம் தேதி துவங்கி மாத இறுதி வரை நடக்கும் என்று, தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. தற்போது தேர்வு துவங்க ஆறு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்வு அட்டவணை, நுழைவுச்சீட்டு வெளியாகவில்லை. இதனால், கியூட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ - மாணவியர் தவித்து வருகின்றனர்.
கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:
கியூட் நுழைவு தேர்வு, 8ம் தேதி துவங்க உள்ளது. கடந்த ஆண்டுகளை விட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தேர்வுக்கான அட்டவணையும், மாணவர்களுக்கு தேர்வு நுழைவு சீட்டையும் இதுவரை தேர்வு முகமை வெளியிடவில்லை.
வெளியூர்களுக்கு சென்று தேர்வு எழுத திட்டமிட்டவர்கள், தேர்வு மையம் தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கான நுழைவு தேர்வும் மே மாதம் நடக்கவுள்ளதால், தேர்வுக்கான அட்டவணையை தாமதமின்றி வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

