எஸ்.எஸ்.ஐ., மீது மாணவர்கள் தாக்குதல் திருப்பூர் அருகே பரபரப்பு
எஸ்.எஸ்.ஐ., மீது மாணவர்கள் தாக்குதல் திருப்பூர் அருகே பரபரப்பு
UPDATED : செப் 29, 2026 02:53 PM
ADDED : செப் 29, 2026 02:54 PM
திருப்பூர்: திருப்பூர் அருகே அதிவேகமாக இயக்கிய தனியார் கல்லுாரி பஸ் குறித்து கேள்வி எழுப்பிய, போலீஸ் எஸ்.எஸ்.ஐ. மீது கல்லுாரி மாணவர்கள், டிரைவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, தாமரைக் கோவில் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 50. இவர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தனது பைக்கில் வீட்டிலிருந்து ஸ்டேஷன் சென்றார். அவர் யூனியார்ம் அணிந்திருக்கவில்லை. அப்போது, ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் கல்லுாரி பஸ், எஸ்.எஸ்.ஐ. சென்ற பைக் மீது உரசுவது போல சென்றதால், யுவராஜ் தடுமாறினார்.
இதனால், சிறிது துாரம் பஸ்சை பின் தொடர்ந்து சென்ற அவர், தனியார் கல்லுாரி பஸ்சின் டிரைவரிடம், “எதற்கு இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்?” என்று கேட்கவே, இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், டிரைவர் மற்றும் பஸ்சில் மாணவர்கள் சிலர், எஸ்.எஸ்.ஐ.,யிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் அவர், தான் எஸ்.எஸ்.ஐ. என்று கூறியும், கும்பலாக சேர்ந்து அவரை தாக்கினர். தகவலறிந்து சென்ற எஸ்.எஸ்.ஐ. உறவினர் மகனையும், மாணவர் கும்பல் தாக்கியது. இதில், இருவருக்கும் தலை பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த களேபரத்தில், எஸ்.எஸ்.ஐ. கழுத்தில் அணிந்திருந்த செயின், மோதிரம், போன் ஆகியன மாயமானது.
போலீஸ் மீதான தாக்குதலை அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக கல்லுாரிக்கு தகவல் அளித்த போலீசார், மாணவர்களுடன் பஸ்சை ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
