UPDATED : ஜூலை 14, 2026 05:22 PM
ADDED : ஜூலை 14, 2026 05:24 PM
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் ராயபுரத்தில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 70 மாணவர்கள் நேற்று மாலை திடீரென பள்ளியை விட்டு வெளியேறி ரோட்டில் மறியலில் சில நிமிடம் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், பள்ளிக்குள் அழைத்து சென்று விசாரித்தனர். பள்ளியில் மாணவர்களையும், பெற்றோரையும் ஆசிரியர்கள் ஒருமையில் திட்டுவதாகவும், பிளஸ் 1 சேர்க்கையின் போது, விண்ணப்பத்துக்கு, 200 ரூபாய் பெற்றதாகவும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இது போன்று பள்ளி நேரத்தில் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட கூடாது. தங்கள் பிரச்னை குறித்து உரியவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று போலீசார் அறிவுரை கூறினர். பள்ளி கல்வித்துறையினர் மாணவர்களின் திடீர் போராட்டம் குறித்து விசாரிக்கின்றனர்.
