சி.இ.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மாணவர்கள்; போலீசார் துாக்கி வீசியதால் தள்ளுமுள்ளு
சி.இ.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மாணவர்கள்; போலீசார் துாக்கி வீசியதால் தள்ளுமுள்ளு
UPDATED : ஜூலை 10, 2025 12:00 AM
ADDED : ஜூலை 10, 2025 09:51 AM
தஞ்சாவூர்:
சி.இ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட 12 மாணவியர் உட்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவங்கப்படும். தமிழக அரசின், பள்ளிக்கல்வித் துறை இணையதளத்தின் வாயிலாக சேர்க்கை நடைமுறைகள் துவங்கப்பட்டு, மே 20ம் தேதி முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு அதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.
இந்த ஆண்டு, சேர்க்கை துவங்காததால், லட்சக்கணக்கான குழந்தைகள் முன் பருவ சேர்க்கையான எல்.கே.ஜி., - யூ.கே.ஜி., விண்ணப்பம் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர். எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத, இட ஒதுக்கீடு பிரச்னையில் மவுனம் காக்கும், தமிழக அரசைக் கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும், இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தஞ்சாவூரில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலர் வசந்தன் தலைமையில், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் ஊர்வலமாக வந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அங்கு, பாதுகாப்பில் இருந்த போலீசார் தடுப்புகளை வைத்து மாணவர்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
அப்போது, மாணவர்களை போலீசார் துாக்கி வீசியதில் மாணவர்கள் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர் மேலும், 12 மாணவியர் உள்ளிட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.