மாணவர்களுக்கு விடுதியில் அறை ஒதுக்கீடு உணவு போதவில்லை என மாணவர்கள் புகார்
மாணவர்களுக்கு விடுதியில் அறை ஒதுக்கீடு உணவு போதவில்லை என மாணவர்கள் புகார்
UPDATED : டிச 19, 2025 09:32 PM
ADDED : டிச 19, 2025 09:54 PM
சென்னை:
நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னை பல்கலை முதுநிலை மாணவர் விடுதி திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், குறைந்த அளவே உணவு தருவதாக, மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை தரமணியில் தங்கி பயிலும், சென்னை பல்கலை முதுநிலை மாணவர்களுக்காக, மெரினா காமராஜர் சாலை அருகே, 55 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று தளங்களுடன் கூடிய, முதுநிலை மாணவர் விடுதி கட்டப்பட்டது.
விடுதியை, கடந்த மே 20ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விடுதி திறக்கப்பட்டு, ஏழு மாதங்கள் ஆகியும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாதது குறித்து, கடந்த 9ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அன்றைய தினமே, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். விடுதியை மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 19 மாணவர்களுக்கு, விடுதி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அதேநேரம், மாணவர் விடுதியில் சமையல் செய்வதற்கான உட் கட்டமைப்பு வசதிகள் இன்றும் நிறைவடையாததால், சென்னை பல்கலை கேன்டீன்களில் இருந்து மாணவர்களுக்கு, மூன்று வேளையும், 19 என்ற எண்ணிக்கையில் உணவு பார்சல்கள் தரப்படுகின்றன.
அந்த பார்சல் உணவு போதுமானதாக இல்லாததால், வெளியிடத்தில் முன்பதிவு செய்து உணவு வாங்கி சாப்பிடுவதாக மாணவர்கள் கூறுகின்றனர். சமையல் அறை கட்டமைப்புகளை ஏற்படுத்தி, விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

