மாணவர்கள் உழைப்பில் 1300 ஓவியங்கள் கலையுடன் வருமானம் தரும் கண்காட்சி
மாணவர்கள் உழைப்பில் 1300 ஓவியங்கள் கலையுடன் வருமானம் தரும் கண்காட்சி
UPDATED : மார் 07, 2026 11:21 AM
ADDED : மார் 07, 2026 11:24 AM

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை நுண்கலை துறை சார்பில் நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் விற்பனை கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை நுண்கலைத் துறை சார்பில் ஓவியம் மற்றும் விற்பனை கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உருவாக்கிய ஆயிரத்து 300 ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் கை வண்ணத்தில் உருவான சிலைகள், பென்சில் ஓவியங்கள், மைக்ரோ ஆர்ட், வாட்டர் பெயின்டிங், அக்ரலிக் பெயின்டிங், ஸ்கர்விங், ரெட்ரோ ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை படைப்புகளை பொது மக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பலர் தங்களுக்கு பிடித்த ஓவியங்களை விலைக்கு வாங்கிச் சென்றனர்.
அழகப்பா பல்கலையில் பயிலும் இலங்கை மாணவி பாத்திமா கூறுகையில், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. காட்சிகளைப் பார்த்தபடி ஓவியங்களை வரையாமல், நாம் கண்களால் பார்த்த ஓவியங்களை ஞாபகப்படுத்தி நமது பார்வையில் அந்த ஓவியத்தை மேலும் தத்துரூபமாக வரைய நுண்கலை படிப்பு உதவியாக உள்ளது.
அனைவரும் பார்த்து வியப்பதோடு இல்லாமல், பார்வையில்லாதவர்கள் கூட விரல்களால் ஓவியத்தின் அழகை ரசிக்கும் வகையிலும் ஓவியங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இத்துறையை படிக்கும் போதே வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. சமூக வலைதளங்கள் அதற்கு பெரும் பாலமாக அமைந்துள்ளது.
தம்பதிகளின் ஓவியங்கள், பழங்கால ஓவியங்கள், இயற்கை ஓவியங்கள் என சமூக வலைதளங்களில் பார்த்து ஆர்வமுடன் பலர் வாங்கிச் செல்கின்றனர்.

