மதுரை அரசு மருத்துவமனைக்குள் மூன்று கல்லுாரிகள் மூச்சுவிட முடியாமல் முழி பிதுங்கும் மாணவர்கள்
மதுரை அரசு மருத்துவமனைக்குள் மூன்று கல்லுாரிகள் மூச்சுவிட முடியாமல் முழி பிதுங்கும் மாணவர்கள்
UPDATED : ஜன 26, 2025 12:00 AM
ADDED : ஜன 26, 2025 10:37 AM

மதுரை :
மதுரை அரசு மருத்துவமனைக்குள் நோயாளிகளுக்கான வார்டுகள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் நர்சிங் பள்ளி, கல்லுாரி, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகள் நெருக்கடியில் இயங்குவதால் வேறிடத்திற்கு மாற்ற வேண்டும்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் மூன்றாண்டு கால பட்டப்படிப்பில் ரேடியாலஜி, ரேடியோதெரபி உட்பட 10 வகையான பாடத்திட்டங்களின் கீழ் 800 மாணவர்களும் 11 வகையான ஓராண்டு படிக்கும் சான்றிதழ் படிப்புகளில் 625 பேரும் பயில்கின்றனர். இவர்களுக்கான வகுப்பறைகள் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே சிறிய கட்டடத்தில் செயல்படுகின்றன. பெரும்பாலானோருக்கு விடுதி வசதி இல்லாததால் வெளியே தங்கி பயில்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் தினமும் 7000 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். 3500 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கான இடவசதி முழுமையாக இல்லாததால் தீவிர விபத்து பிரிவு, பல்நோக்கு சிறப்பு மருத்துவ வளாகம் என தனிப்பிரிவுகளாக அரசு மருத்துவக் கல்லுாரி அருகே செயல்படுகிறது.
மேலும் இங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் கதிர்வீச்சு சிகிச்சைக்காக மட்டும் பாலரெங்காபுரத்தில் புற்றுநோய் மண்டல மையம் தனியாக செயல்படுகிறது. இப்படி ஒவ்வொரு பிரிவும் இடவசதியின்றி செயல்படும் நிலையில் மருத்துவமனை நெருக்கடிக்குள் நர்சிங் பள்ளி, நர்சிங் கல்லுாரி, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
தடுக்கி விழுந்தால் கூட நடப்பதற்கு இடமில்லாத நிலையில் இவை அனைத்தையும் மதுரை மத்திய சிறை வளாகத்திற்கு கொண்டு செல்லலாம். மத்திய சிறைக்கு செம்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்த நிலையில் இந்த இடம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட உள்ளது.
அரசு மருத்துவமனையில் இருந்து 4 கி.மீ., தொலைவில் மத்திய சிறை வளாகம் உள்ளது. இங்கு நர்சிங் பள்ளி, கல்லுாரி, அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகள் மாற்றப்பட்டால் அங்கேயே மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் கட்ட முடியும். மாணவர்களுக்கான பிரத்யேக பஸ் வழங்கும் போது மதுரை அரசு மருத்துவமனை வந்து செல்வது எளிதாக இருக்கும்.