நீட் குறித்து மாணவர்கள் எந்த குறையும் கூறவில்லை: விஜயபிரபாகரன்
நீட் குறித்து மாணவர்கள் எந்த குறையும் கூறவில்லை: விஜயபிரபாகரன்
UPDATED : ஜூலை 15, 2024 12:00 AM
ADDED : ஜூலை 15, 2024 08:44 AM
திருப்பரங்குன்றம்:
லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் மதுரை அவனியாபுரம், திருப்பரங்குன்றம், ஹார்விபட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியதாவது:
நான்காயிரம் ஓட்டுகளில் தோற்றேன் என்பதை விட தோற்கடிக்கப்பட்டேன் என்பது தான் உண்மை. இது எனக்கு தோல்வி அல்ல. முதல் படி தான். எனக்கு ஓட்டளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தல்களில் அ.தி.மு.க., தே.மு.தி.க., மாபெரும் வெற்றி பெறும் என்றார். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரையூர், டி.கல்லுப்பட்டியில் விஜயபிரபாகரன் பேசியதாவது:
லோக்சபா தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. நான் தோற்றாலும் மக்களுக்காக பணியாற்றுவேன். நீட் தேர்வு பற்றி டாக்டர்களும், டாக்டர்களுக்கு படிக்கும் மாணவர்களும் எந்த குறையும் கூறாத போது, படிக்காத சிலர் இது பற்றி குறைகளை கூறிக் கொண்டே வருகின்றனர்.
எங்கள் குடும்பம் பதவி சுகத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் இருக்கிறோம் என்றார்.