மாணவர்கள் சமுதாய பணியாற்ற வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜ்குமார் பேச்சு
மாணவர்கள் சமுதாய பணியாற்ற வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜ்குமார் பேச்சு
UPDATED : அக் 23, 2026 01:39 PM
ADDED : அக் 23, 2026 01:41 PM
கடலுார்:
மாணவர்களாகிய நீங்கள் போதைக்கு அடிமையாகாமல் சமுதாய பணியாற்ற வேண்டும் என அமைச்சர் ராஜ்குமார் பேசினார்.
கடலுார் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா அக்., 22 நடந்தது. கல்லுாரி முதல்வர் வாசுகி வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் ராஜ்குமார் 910 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
நாம் படித்த படிப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் கல்லுாரி வாழ்க்கை தான். உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.
மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்கமாகவும், போதைக்கு அடிமையாகாமல் சமுதாய பணியாற்ற வேண்டும். முதல்வர் மாணவர்களுக்கு வெற்றி கனிணி திட்டம் வழங்க உள்ளார்.
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000, பல லட்சம் ரூபாய் கல்விக்கடன் வழங்கும் அரசாக உள்ளது. நீங்கள் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். மாவட்ட அமைச்சர் என்ற முறையில் உங்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர உத்தரவாதம் அளிக்கிறேன்.
இக்கல்லுாரியில் 2000 பேர் உட்காரக்கூடிய ஆடிட்டோரியம் கட்ட முதல்வரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வேன் என பேசினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார், கல்லுாரி கல்வி மண்டல இயக்குனர் மலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
