பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்
பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்
UPDATED : ஆக 06, 2025 12:00 AM
ADDED : ஆக 06, 2025 09:27 AM
திருத்தணி:
அரசு துவக்கப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடத்தியதால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி பி.சி.என்.கண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.
இப்பள்ளியில் உள்ள இரு வகுப்பறை கட்டடத்தில், ஒரு சிறிய பகுதியில் மாணவர்களை அமர வைத்துவிட்டு, மீதமுள்ள வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முழுதும், முகாமிற்கான பல்வேறு துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த முகாமில், அதிக அளவில் மக்கள் பங்கேற்றதால், அங்கு எழுந்த கூச்சல் சத்தத்தால், ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாமலும், மாணவர்கள் படிக்க முடியாமலும் சிரமப்பட்டனர். மேலும், மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அரசு நிகழ்ச்சிகளை, ஊராட்சிகளில் சேவை மையம், சமுதாய கூடம் போன்ற இடங்களில் நடத்தாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். பள்ளி நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.
1,546 மனுக்கள் ஏற்பு
கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியில் நேற்று நடந்த முகாமில் 677 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட, 1,546 மனுக்கள் ஏற்கப்பட்டன. கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சவுந்தரி, நடராஜன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளராக, திருவள்ளூர் தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்றார்.