குறுகிய காலத்தில் 2 செமஸ்டர் தேர்வுகள் பல்கலை முடிவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு
குறுகிய காலத்தில் 2 செமஸ்டர் தேர்வுகள் பல்கலை முடிவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு
UPDATED : மே 28, 2026 06:53 AM
ADDED : மே 28, 2026 06:53 PM

தொலைதுார கல்வி நிறுவனத்துக்கான செமஸ்டர் தேர்வில், இரு செமஸ்டர் தேர்வுகளையும் ஒன்றாக நடத்தும், சென்னை பல்கலையின் முடிவுக்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி நிறுவனம் சார்பில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஜூன், டிசம்பர் மாதங்களில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின், சென்னை பல்கலை தொலைதுார கல்வி நிறுவன செமஸ்டர் தேர்வு கால சுழற்சியில் தாமதமானது.
அதாவது, டிசம்பரில் நடக்க வேண்டிய தேர்வு கள், ஜூனிலும், ஜூனில் நடக்க வேண்டிய தேர்வுகள் 6 மாத தாமதத்துக்கு பின், டிசம்பர் மாதமும் நடத்தப்பட்டு வருகின்றன.
செமஸ்டர் தேர்வுகளுக்கு இடையேயான, இந்த கால இடைவெளியை சரி செய்ய சென்னை பல்கலை திட்டமிட்டது. கடந்த ஆண்டு, ஜூன், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளை டிசம்பர் மாதத்தில், சிறிய கால இடைவெளியில், ஒன்றாக நடத்தப்படும் என அறிவித்தது.
மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டு, ஜூன் மாத செமஸ்டர் தேர்வு மட்டுமே டிசம்பரில் நடந்தது. முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது.
இந்நிலையில், தொலைதுார கல்வி மாணவர்களுக்கு, 2025ம் ஆண்டுக்கான டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுடன், 2026 ஜூன் மாத செமஸ்டர் தேர்வையும் நடத்த, சென்னை பல்கலை திட்டமிட்டுள்ளது. ஜூன் இறுதியில் தேர்வு தொடங்க உள்ளது.
அதற்கு, மாணவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சென்னை பல்கலை அதிகாரிகள் கூறியதாவது:
செமஸ்டர் தேர்வுகள் தொடர்ந்து காலதாமதமாகநடத்தப்படுவதால், தொலைதுார மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது. இளநிலை முடித்து, முதுநிலை செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதை சரி செய்யவே, 2025 டிசம்பர், 2026 ஜூன் மாத செமஸ்டர் தேர்வுகள் ஒன்றாக நடத்தப்பட உள்ளது. ஆனால், ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே, மாணவர்கள் படிக்கும் வகையில், கால இடைவெளி இருக்கும்.
தேர்வு அட்டவணை, இரண்டு மாத கால அட்டவணையாக இருக்கும். இதனால், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தற்போது, இந்த இடைவெளியை குறைத்தால், 2026 டிசம்பர் செமஸ்டர் தேர்வு, நடப்பாண் டு டிசம்பர் மாதமே நடத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜூன் 1க்குள் விண்ணப்பிப்பது அவசியம் சென்னை பல்கலையில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புக்கான, 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில், முதுநிலை, முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, வரும் ஜூன் 1ம் தேதி நிறைவடைகிறது. இளநிலை மாணவர்கள், www.unom.ac.in என்ற இணையதளத்தில், உரிய ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
