விடுதிகளுக்கு காவலாளி நியமிக்க அரசுக்கு மாணவியர் கோரிக்கை
விடுதிகளுக்கு காவலாளி நியமிக்க அரசுக்கு மாணவியர் கோரிக்கை
UPDATED : மார் 21, 2025 12:00 AM
ADDED : மார் 21, 2025 09:42 AM
சென்னை:
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்படும், மாணவியர் விடுதிகளுக்கு, இரவு நேர காவலாளி நியமிக்க வேண்டும் என, அரசுக்கு மாணவியர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 494 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர் விடுதிகள் உள்ளன. இவற்றில், 20,000க்கும் அதிகமான மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கடலுார், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விடுதிகளில், பெரும்பாலானவற்றில் இரவு நேர காவலாளிகள் இல்லை. இதனால், மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு நேர காவலாளியை விடுதிகளில் நியமிக்க வேண்டும். என, அரசுக்கு விடுதி மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, விடுதி மாணவியர் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் எஸ்.சி., - எஸ்.டி., மாணவியருக்கு என செயல்படும் விடுதிகளில், பாதிக்கு மேல் இரவு நேர காவலாளி இல்லை. காவலாளி உள்ள விடுதிகளிலும், அவர்கள் முறையாக, பணிக்கு வருவதில்லை.
சில இடங்களில் ஒரே காப்பாளர், இரண்டு விடுதிகளை கண்காணித்து வருகின்றனர். அதேபோல், 40 சதவீதம் விடுதிகளில், காப்பாளர் இரவு நேரத்தில் விடுதிகளில் தங்குவதில்லை. இதனால், விடுதிகளில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், விடுதிகளில் நாப்கின் இயந்திரம், கழிப்பறை, சுற்றுச்சுவர் என, மாணவியருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. இதனால், அரசு தரப்பில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட, தற்போது குறைவான மாணவியரே, விடுதிகளில் தங்கி உள்ளோம்.
எனவே, அரசு மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விடுதிகளில் உடனடியாக இரவு நேரக் காவலாளிகளை நியமிப்பதோடு, காப்பாளர்கள் இரவு விடுதிகளில் தங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.