அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே இடம்; ஒரே சமையல்
அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே இடம்; ஒரே சமையல்
UPDATED : மார் 27, 2025 12:00 AM
ADDED : மார் 27, 2025 01:30 PM
மதுரை:
அரசு விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு முன்னோட்டமாக மதுரை மாவட்டத்தில் 2 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் 36, ஆதிதிராவிடர் நலத்துறையில் 34 என 70 விடுதிகள் உள்ளன. 2013க்கு பின் நியமனம் இல்லாததால் பல விடுதிகளில் சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வெளியாட்களை வைத்து உணவு தயாரித்து சமாளித்து வருகின்றனர். மேலும் உணவும் தரமின்றியும் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் எழுகிறது. எனவே அரசு ஒருங்கிணைந்த சமையல் கூடம் முடிவை எடுத்துள்ளது. இதே அடிப்படையில்தான் பள்ளிகளில் காலை உணவு ஒரு இடத்தில் தயாராகி பல பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் விடுதிகளுக்கு இதனை அறிமுகம் செய்தது வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக மதுரையில் 2 ஒருங்கிணைந்த கூடம் அமையவுள்ளது. இக்கூடத்தில் 10 விடுதிகளுக்கான மாணவர்களுக்கு 3 வேளைகளிலும் உணவு தயாராகும். அதனை வேன்களில் எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட விடுதிகளில் வினியோகிப்பர். இதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிப்பதுடன், பல விடுதிகளுக்கும் ஒரே தரத்திலான உணவு வழங்க முடியும்.
மதுரை நகரில் சாத்தமங்கலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைய உள்ளது. அங்கு தயாராகும் உணவு ரேஸ்கோர்ஸ், தல்லாகுளம் உட்பட பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். அதேபோல தனக்கன்குளம் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் ஒருங்கிணைந்த கூடம் அமைய உள்ளது.
ஏற்பாடுகளை கலெக்டர் சங்கீதா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.