UPDATED : மார் 18, 2025 12:00 AM
ADDED : மார் 18, 2025 09:46 AM
திருப்புவனம்:
திருப்புவனம் தாலுகாவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கீழடி, மணலூர், பழையனூர் உள்ளிட்ட நகரங்களில் பொதுத்தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகின்றன.
பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களில் முழுமையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் திருப்பாச்சேத்தி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
எப்போது மின்சாரம் வரும் என்றே தெரியாமல் மாணவ, மாணவியர் தேர்வில் முழு கவனமும் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
பலமுறை மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. திருப்பாச்சேத்தி, வடகரை, எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.