தடையை மீறும் மாணவர்கள்! மொபைல்போன் பயன்பாடு அதிகரிப்பு; பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
தடையை மீறும் மாணவர்கள்! மொபைல்போன் பயன்பாடு அதிகரிப்பு; பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
UPDATED : செப் 18, 2025 12:00 AM
ADDED : செப் 18, 2025 09:42 AM

பெ.நா.பாளையம்:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தடையையும் மீறி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதை தடுக்க பள்ளி கல்வித்துறை தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளியில் மாணவர்களின் சிந்தனை திறனை அழிக்கும் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இதே போல பள்ளிகளில் அமைதியான சூழலை உருவாக்கவும், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும், பள்ளி சுற்றுப்புற சூழல் சிறந்து விளங்கவும், பள்ளி கல்வித்துறை பல்வேறு வகையான வழிமுறைகளை அவ்வப்போது சுற்றறிக்கையாக பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறது.
இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்,' பள்ளி வளாகத்தில் யாரும் சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே விதைக்க கூடாது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல துறைகள் வாயிலாக வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை பற்றிய விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்பட வேண்டும். இந்த விவரங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுவெளியில் காட்சிப்படுத்தக் கூடாது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்றம்' குழு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், மாணவர்கள் மொபைல் போன் பள்ளிகளில் பயன்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது. அதை தலைமை ஆசிரியரோ அல்லது பிற ஆசிரியரோ பறிமுதல் செய்து, மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். 'மாணவர் மனசு' புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மை குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அது குறித்து விசாரணை செய்து மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'ஸ்மார்ட் போன் வாயிலாக பல்வேறு நல்ல கருத்துக்களை, தகவல்களை தெரிந்து கொண்டாலும், தேவையில்லாத விஷயங்களை மொபைல் போன் வாயிலாக பார்த்து மாணவர்கள் தங்கள் உடல், மனம் ஆகியவற்றை கெடுத்துக் கொள்கின்றனர்.
பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டாலும், அவர்கள் வீடுகளில் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போது ஒரு சில நாடுகளில் குறிப்பிட்ட வயதுக்கு பின்பே மொபைல் போன் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை, நமது நாட்டிலும் செயல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்' என்றனர்.