கொடுமணல் அகழாய்வு தளத்தை பார்வையிட்ட மாணவ, மாணவியர்
கொடுமணல் அகழாய்வு தளத்தை பார்வையிட்ட மாணவ, மாணவியர்
UPDATED : அக் 11, 2026 01:17 PM
ADDED : அக் 11, 2026 01:18 PM
சென்னிமலை:
சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட கொடுமணலில் அகழாய்வு தளம் உள்ளது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை சார்பில், நினைவு சின்னங்களை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நேற்று கல்விச்சுற்றுலா வந்தனர்.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் பழங்கால மக்களின் வாழ்வியல் முறை, மணிகள் தயாரித்தல், இரும்பு உள்ளிட்ட உலோக பயன்பாடு, அணிகலன் தயாரித்தல் மற்றும் வணிகத் தொடர்பு குறித்த சான்று கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றை கல்வி சுற்றுலாவாக வந்த சிக்கய்யா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வரலாற்றுத் துறை மாணவ, மாணவியர் மற்றும் ஸ்ரீ வள்ளியப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவ, மாணவியர், 145 பேர் பார்வையிட்டனர். தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் தளங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவர்களுடன் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பழனிச்சாமி, கொடுமணல் தொல்லியல் துறை அலுவலர் ஜெயப்பிரியா, துணை ஆட்சியர் சித்தார்த், பெருந்துறை தாசில்தார் செல்வகுமார், சென்னிமலை பி.டி.ஓ., சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
