பஸ் வசதியின்றி 5 கிலோமீட்டர் நடந்து செல்லும் மாணவர்கள்
பஸ் வசதியின்றி 5 கிலோமீட்டர் நடந்து செல்லும் மாணவர்கள்
UPDATED : மே 19, 2025 12:00 AM
ADDED : மே 19, 2025 10:11 AM
சிவகங்கை :
சிவகங்கை அருகே அழகமாநகரியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருமலை, சேதுநகர், கள்ளராதினிப்பட்டி, உசிலம்பட்டி, காடமுத்தான்பட்டி கிராமத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடந்த அரசு பொதுத்தேர்வில் இந்த பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளிக்கு திருமலை, சேதுநகர், கள்ளராதினிபட்டி கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் போதிய பஸ் வசதியில்லாததால் பள்ளிக்கு நடந்தும் சைக்கிளிலும் வரும் சூழல் உள்ளது. இதனால் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வரமுடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இது பள்ளிக்கு மாணவர்களின் சேர்க்கை குறைவதற்கும் காரணமாக உள்ளது. எனவே தற்போது சிவகங்கையில் இருந்து கள்ளராதினிப்பட்டி வரை காலை 8:30 மணிக்கும் மாலை 4:00 மணிக்கும் அரசு பஸ் வந்து செல்கிறது. அந்த பஸ்சை அழகமாநகரி வரை நீட்டித்தால் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வந்து செல்ல உதவியாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் கள்ளராதினிப்பட்டிக்கு வரும் அரசு பஸ்சை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அழகமாநகரி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.