கேள்வி கேட்கும் மாணவர்கள் அச்சுறுத்தலாக மாறிவிட்டார்கள்: சொல்கிறார் ராகுல்
கேள்வி கேட்கும் மாணவர்கள் அச்சுறுத்தலாக மாறிவிட்டார்கள்: சொல்கிறார் ராகுல்
UPDATED : செப் 20, 2026 11:38 PM
ADDED : செப் 20, 2026 11:41 PM
இந்தூர்:
“தேர்வுகளில் முறைகேடுகள், கசிவுகள் மற்றும் கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பு சீர்குலைவது குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். அவர்கள் இல்லாமல் எந்த நாடும் முன்னேற முடியாது. மாணவர்கள் எப்போதும் ஆர்வத்துடனும், அச்சமின்றி கேள்வி கேட்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், சில ஆதரவாளர்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு மாய உலகத்தில் வாழ்வதோடு கோழைகளாக இருக்கிறார்கள்.
அரசுக்கு மாணவர்கள் கேள்விகள் கேட்பது அச்சுறுத்தலாக இருக்கிறது. தேர்வுகளில் முறைகேடுகள், கசிவுகள் மற்றும் கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பு சீர்குலைவது குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல்கள் உட்பட அனைத்துத் தேர்வுகளிலும் 13 சதவீத பணியிடங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாமல் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதால், பல இளைஞர்களின் வயது வரம்பு முடிந்து தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
