UPDATED : மே 28, 2024 12:00 AM
ADDED : மே 28, 2024 09:53 AM
கோவை:
கதை சொல்லி, கதை எழுதுதல், வரைதல் உட்பட போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்திய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
கோவையை சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் அமுதா, கதைகள் வாயிலாக குழந்தைகளிடம் பிரபலம். கடந்த 10 வருடங்களாக, வாரந்தோறும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கதைகள் சொல்லி, அவர்களின் தன்னம்பிக்கையை பெருக்கி வருகிறார்.
கொரோனா காலத்துக்குப் பின், தற்போது வரை ஆன்லைன் வாயிலாக, தன் பணியை தொடர்ந்து வருகிறார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, கதை சொல்லுதல், கதை எழுதுதல், வரைதல், மோனோ ஆக்டிங் உட்பட பல போட்டிகளை, ஆண்டுதோறும் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான விழா, கோவை சப்னா புக் ஹவுசில் நடந்தது. இதில், குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, பெற்றோரை கவர்ந்தது. மேடையில், குழந்தைகள் பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற சப்னா புக் ஹவுஸ் தலைமை நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், ஓவிய ஆசிரியர் அனுராதா, கதை சொல்லிகள் பிரியம்வதா, மினாள் ஆகியோர், குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.