UPDATED : அக் 22, 2025 08:27 AM
ADDED : அக் 22, 2025 08:28 AM
ஆனைமலை:
ஆனைமலை வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ் புதிய விரிவாக்க அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல் இனத்தில், ஆனைமலை, கோட்டூர் மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்ட கிராமங்களை சார்ந்த அரசுபள்ளியில் பயிலும் பிளஸ்2 மாணவ மாணவியர் களப்பயணமாக நெகமம் சிறுகளந்தைக்கு சென்றனர்.
ரசாயன உரங்கள், பூச்சி, களைக்கொல்லிகள் பயன்படுத்தாத, உயிர் வேளாண்மையின் அடிப்படை தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு, தங்கள் வாழ்வியலின் அங்கமாக கடைபிடிக்கும் நோக்கத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நெகமம் சிறுகளந்தையை சேர்ந்த சம்பத்குமாரின் பிரகதி அங்கக வேளாண் பண்ணைக்கு சென்றனர்.நீண்ட கால நுகர்வில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுக்கள் இல்லாமல், ஒருங்கிணைந்த பண்ணைய விளைபொருட்களை உற்பத்தி செய்வது குறித்து விளக்கப்பட்டது.
இதற்கு அடிப்படை இடுபொருட்களான தமிழ்நாட்டு உள்ளூர் மாடுகளை பாதுகாப்பது; அவற்றின் கழிவுகளால் உருவாக்கப்படும் பஞ்சகாவ்வியம், ஜீவாமிர்தம், மண்புழு உற்பத்தி, கெட்டில் ஆடு வளர்ப்பு, திறந்த வெளி நாட்டுக்கோழி வளர்ப்பு, தென்னையுடன் பல அடுக்கு வாழை முருங்கை, கொய்யா, மகாகனி, தேக்கு மரபயிர்கள் வளர்த்தலால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டன.
பூச்சி தாக்குதலை தடுக்கும் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு கரைசல் தயாரித்தல், சூரிய கூடார உலர்த்தியால் பெறப்படும் தேங்காய் எண்ணெய், வாழைப்பழம், புண்ணாக்கு துாள் அவற்றின் தரம் சுவை, பண்ணையிலேயே விளை பொருட்களை மதிப்புகூட்டுதல், நேரடி சில்லரை விற்பனை ஆகியவை குறித்து மாணவ, மாணவியர் அறிந்து கொண்டனர்.
வருங்காலங்களில் விழிப்புணர்வுடன் நுகர்வோராக இருந்து, தற்சார்பு விவசாயத்தினை வீட்டுத்தோட்டத்திலும் செய்வது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மாணவ மாணவியருடன் ஆறு ஆசிரியர்களும் உடனிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை,ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் செய்தனர்.