பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் இப்படியொரு சிக்கல்!
பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் இப்படியொரு சிக்கல்!
UPDATED : நவ 04, 2025 08:03 AM
ADDED : நவ 04, 2025 08:04 AM

 பொள்ளாச்சி: 
அரசு பள்ளிகளில், மாணவர்களின் ஆதார் விபரங்கள் முறையாக 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளதால், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, சிறுபான்மையினர், பெண் கல்வி ஊக்குவிப்பு, தமிழ் திறனறித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
குறிப்பாக, வகுப்பு வாரியாக, ஆயிரம் முதல் 3,500 ரூபாய், மாதம் மற்றும் ஓர் ஆண்டினை கணக்கிட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, தகுதியான மாணவர்கள், வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு துவக்க அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பல அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் விபரங்கள் முறையாக 'அப்டேட்' செய்யப்படாததால், அவர்களுக்கான கல்வி உதவித் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆதார் 'அப்டேட்' செய்யும் பொருட்டு, தபால் அலுவலகம், இ-சேவை மையத்திற்கு சென்றாலும், குறைந்த எண்ணிக்கையில் 'டோக்கன்' வழங்கி திருத்தம் செய்யப்படுவதால், பெற்றோர்கள் அலைகழிப்புக்கு ஆளாகுகின்றனர்.
பள்ளிகளிலேயே ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படாததால், ஆசிரியர்களும் செய்வதறியாது திணறுகின்றனர்.
கல்வித்துறையினர் கூறியதாவது:
பொதுவாக, ஐந்து முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர், தங்களது ஆதார் பயோமெட்ரிக் தகவல்களான, கைரேகை மற்றும் கருவிழியை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
ஆனால், பலர், தங்களது ஆதார் விபரங்களை 'அப்டேட்' செய்யாமல் உள்ளனர். பெயர், முகவரி, மொபைல்போன் எண் மாற்றங்கள் திருத்தம் செய்யாமலும் உள்ளனர். இதனால், வங்கிக் கணக்கில், கல்வி உதவித் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, கல்வி உதவித் தொகைக்காக, வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்க மாணவர்கள் முற்பட்டால், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் முறையாக 'சீடிங்' செய்யப்படுவதும் கிடையாது. இதற்கு மாற்றாக, தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு துவக்க, சில பள்ளித் தலைமையாசிரியர்களே மாணவர்களை அறிவுறுத்துகின்றனர்.
சில பள்ளிகளில், தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியரின் ஆர்மின்மை காரணமாக, தகுதியான மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறாமல் உள்ளனர். கல்வி உதவித் தொகை பெறாத மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பள்ளிக்கு ஏற்ப 5 முதல் 7 சதவீதம் பேர் வரை உள்ளனர்.
மேலும்,இ-சேவை மையம், தபால் அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் இல்லையென, ஆதார் திருத்தம் செய்யும் பணியும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. அம்மையங்களுக்கு மாணவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் அலைய வேண்டியிருக்கிறது.
வங்கிக் கணக்கு, ஆதார், எமிஸ் உள்ளிட்டவைகளில் சரியான முறையில் பெயர் விபரம் இருந்தாலே, கல்வி உதவித் தொகை பெற முடிகிறது. எனவே, இதற்கான பணியை, மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி, ஆதார் மையப் பணியாளர்களால் பள்ளிகள் தோறும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

