காலை உணவு திட்டம் திடீர் ரத்து சிறுவர், சிறுமியர் பசியால் தவிப்பு
காலை உணவு திட்டம் திடீர் ரத்து சிறுவர், சிறுமியர் பசியால் தவிப்பு
UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM
ADDED : ஜூலை 16, 2025 08:27 AM

ப.வேலுார்:
நாமக்கல் மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், சிறுவர், சிறுமியர் பசியால் தவித்தனர்.
இதையறிந்த பெற்றோர், ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காமராஜர் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து பள்ளிகளில், நேற்று காலை, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ப.வேலுார் கந்தசாமிகண்டர் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, 92 மாணவர்களுக்கு, நேற்று காலை சிற்றுண்டி வழங்குவதாக, ஆசிரியர்கள் முதல் நாளே அறிவித்திருந்தனர்.
இதனால், நேற்று காலையில் மாணவ, மாணவியர் உணவருந்தாமல், ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆனால், காலை, 8:00 மணி ஆகியும் சிற்றுண்டி வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவியர் ஆசிரியர்களிடம் கேட்டனர்.
அப்போது, இன்று சிற்றுண்டி வழங்க இயலாது என, தெரிவித்தனர். பசியில் வாடிய மாணவியர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நிலைமையை சமாளிக்க, காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்., சார்பில் கொடுத்த இனிப்பு மற்றும் பிஸ்கட்டுகளை, மாணவர்களுக்கு கொடுத்து பசியை போக்கினர்.