நீதித்துறை ஊழல்கள் பாடப்புத்தகத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
நீதித்துறை ஊழல்கள் பாடப்புத்தகத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
UPDATED : பிப் 27, 2026 04:49 PM
ADDED : பிப் 27, 2026 04:52 PM

புதுடில்லி:
என்.சி.இ.ஆர்.டி.,யின் சர்ச்சைக்குரிய பாடப் புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. நீதித்துறை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட ரீதியில் அந்த பாடம் இடம் பெற்றிருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் தலை நிச்சயம் உருளும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின், எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பில் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் புதிய பாடத்தைச் சேர்த்தது. இது சர்ச்சையானது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு தாமாக முன் வந்து, இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்து கண்டித்தது.
ரத்தம் வழிகிறது
இதையடுத்து சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க என்.சி.இ.ஆர்.டி., முடிவு செய்ததாகவும், தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் பன்சோலி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதித்துறை மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த பாடத்தைச் சேர்த்தது போல தோன்றுகிறது. நீதித்துறையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால், ரத்தம் வழிகிறது.
நீதித்துறையின் கண்ணியத்தை குறைக்கும் அளவுக்கு அந்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தவறுதலான பாடத்தால், மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை அடியோடு அழிந்து போகும். இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய ஆழமான விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்களின் தலை நிச்சயம் உருளும்.
சர்ச்சைக்குரிய பாடப்புத்தகத்தின் அச்சு பிரதிகள் மக்களின் கைகளுக்கு கிடைக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். மீண்டும் அந்த பாடத்தை அச்சிடவோ, டிஜிட்டல் முறையில் வெளியிடவோ கூடாது.
இது வரை அச்சிடப்பட்ட புத்தகங்கள், டிஜிட்டல் பிரதிகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். சர்ச்சைக்குரிய பாடத்தை முழுதாக தடை செய்கிறோம்.
நோட்டீஸ்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, அந்த பாடப்புத்தகத்தை வினியோகிப்பதோ, டிஜிட்டல் வடிவில் வெளியிடுவதோ தெரிந்தால், கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்றது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி., வார்த்தைக்கு கூட மன்னிப்பு கோரவில்லை; மாறாக, நியாயப்படுத்த முயற்சிக்கிறது.
எனவே, என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர், பள்ளி கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். அவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்துக் கொண்டார். எனினும், இவ்வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்த பாடத்தில், வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை, நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்கள் ஆகியவை பெரும் சவாலாக குறிப்பிடப்பட்டிருந்தன.
நீதித்துறையை உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறோம். நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு துளி கூட கிடையாது. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். நீதித்துறை எடுக்கும் முடிவுகளுக்கு முழுதாக கட்டுப்படுகிறோம். நடந்த தவறுக்காக வருந்துகிறேன். இந்த பாடத்தை உருவாக்கியவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் இப்படியொரு தவறு நிச்சயம் நிகழாது என்பதை நீதித் துறைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
- தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை அமைச்சர், பா.ஜ.,
மன்னிப்பு கேட்டது என்.சி.இ.ஆர்.டி.,
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனும் என்.சி.இ.ஆர்.டி., இந்த விவகாரத்துக்காக மன்னிப்பு கோரி உள்ளது.
இது குறித்து, என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்ட அறிக்கை:
புதிதாக வெளியிட்ட எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், சில பிழைகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, மத்திய கல்வித் துறை, மறு உத்தரவு வரும் வரை, அந்த புத்தக விற்பனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி.,க்கு நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.
இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலராக நீதித் துறை விளங்குகிறது. புத்தகத்தில் இடம்பெற்ற தவறுக்காக, என்.சி.இ.ஆர்.டி., வருந்துகிறது; மன்னிப்பு கோருகிறது. திருத்தப்பட்ட பாடப்புத்தகம், 2026 - 27ம் கல்வியாண்டில், மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் 8,600 புகார்கள்
'நீதித்துறை ஊழல்கள்' என்ற தலைப்பில் வெளியான பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், கடந்த 2016 முதல் 2025ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக 8,600 ஊழல் புகார்கள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபாவில் இதற்கான தரவுகள் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், அதிகபட்சமாக 2024ல் 1,170 புகார்கள் நீதித்துறைக்கு எதிராக பதிவாகி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 2025ல் 1,102 புகார்களும்; 2019ல் 1,037 வழக்குகளும், பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கடந்த 2020ல், 518 புகார்கள் பதிவாகி இருப்பதாக புள்ளி விபரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருத்தம்
என்.சி.ஆர்.இ.டி., வெளியிட்ட பாடப்புத்தகம் குறித்து பிரதமர் மோடி கவலையை வெளிப்படுத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில், 'நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்தில் நீதித்துறை சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கை சேர்ப்பதற்கு பிரதமர் ஆட்சேபனை தெரிவித்தார்.
'நீதித்துறை ஊழல் குறித்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன கற்றுத்தர விரும்புகின்றனர்? இந்த பாடத்தை அவர்கள் கற்க சரியான வயதா இது? இந்த பொருளடக்கமுள்ள பாடம் இடம்பெறுவதை கண்காணித்தது யார்? அதை பாடத்திட்டத்தில் சேர்க்க ஒப்புதல் அளித்தது யார்? என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்' என, அவர்கள் தெரிவித்தனர்.

