முதுநிலை மருத்துவ படிப்பு சீட் முடக்கத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
முதுநிலை மருத்துவ படிப்பு சீட் முடக்கத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
UPDATED : மே 23, 2025 12:00 AM
ADDED : மே 23, 2025 08:09 PM

புதுடில்லி:
முதுநிலை மருத்துவ படிப்பில் நடக்கும், சீட் பிளாக் எனப்படும் முன்பதிவு செய்வதை தடுக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பின், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் நடக்கும். ஆனால் சிலர், கல்லுாரிகளில் சீட்களை முன்பதிவு செய்து கொள்வதால், தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
சீட்களை முன்னதாகவே முடக்கிக் கொள்வது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கவில்லை; பல இடங்களில் பரவலாக நடக்கிறது. இதனால், நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் தகுதியுள்ள மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளில் சேர முடிவதில்லை.
ஓட்டைகள்
பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், நடைமுறையில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்தி இது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க, நடைமுறைகளை ஒருங்கிணைந்து, மிகவும் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். அதன்படி, தேசிய அளவிலான கோட்டா மற்றும் மாநில சுற்றுகளுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணைகளை, தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட வேண்டும்.
தடுக்க முடியும்
அனைத்து தனியார் மற்றும் தன்னாட்சி பல்கலைகளில் காலியாக உள்ள இடங்கள், அதற்கான கட்டண விபரம் உட்பட அனைத்து தகவல்களையும், கவுன்சிலிங்குக்கு முன்னதாகவே வெளியிட வேண்டும். நீட் தேர்வுக்கு பின், தகுதியின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும். இதன் வாயிலாக, சீட்களை முன்னதாகவே முடக்கி வைப்பதை தடுக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.