UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 08:31 AM
சிவாஜிநகர்:
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் மூன்றாவது தமிழ் புத்தக திருவிழாவை பெங்களூரில் இன்று, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் துவக்கி வைக்கிறார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் 2022ம் ஆண்டில் பெங்களூரு தமிழ் சங்கத்தில், முதல் முறையாக தமிழ் புத்தக திருவிழா நடத்தியது. இந்த திருவிழாவுக்கு தமிழ் ஆர்வலர்கள், மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
புத்தகம் படிப்பவர்கள் தங்கள் அறிவை மேலும் வளர்த்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாவது தமிழ் புத்தக திருவிழாவை, சிவாஜி நகரில் நடத்தினர்.
இந்நிலையில் மூன்றாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழா, இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் புத்தக திருவிழாவை, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் துவக்கி வைக்கிறார்.
இந்த புத்தக கண்காட்சியில் அமைக்கப்படும் அரங்குகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. புத்தக திருவிழாவை ஒட்டி இம்முறை புதிய முயற்சியாக பயன்படுத்திய பழைய புத்தகங்களை நன்கொடையாக கொடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 500 ரூபாய் செலுத்தி, 10 பழைய புத்தகங்களை வாங்கி செல்லலாம்.
ஆன்லைன் மூலம் தமிழ் படிக்க பதிவு செய்ய தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர இலவச கண் பரிசோதனை முகாம், சித்த மருத்துவ முகாமும் நடக்க உள்ளது.
இன்று முதல் 29ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் கலை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.