UPDATED : ஏப் 28, 2025 12:00 AM
ADDED : ஏப் 28, 2025 01:27 PM

சென்னை:
ஒரு கோடி ரூபாய் செலவு செய்தும், தமிழ் லெக்சிகன் எனப்படும், தமிழ் பேரகராதியை சென்னை பல்கலை வெளியிடாததால், மொழியியல் ஆய்வாளர்கள் தனியார் பேரகராதிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பேச்சு, எழுத்து, பொதுப்புழக்கம் என, தொடர் பயன்பாட்டில் இருக்கும் செம்மொழி தான் தமிழ். அதன் மொழி வளம் செறிவானது. அதன் பழைய சொற்களின் பயன்பாடு மெல்ல மறைந்தாலும், நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, புதிய சொற்களை உருவாக்கி கொள்கிறது. எனினும், பழைய வார்த்தைகளை பின்பற்றி உருவாக்கும் போது தான், அதன் செம்மொழி தகுதியை தொடர்ந்து தக்க வைக்கும்.
தொகுக்கும் பணி
அந்த வகையில், தமிழ் மொழியில் உருவான பழமையான இலக்கண நுால்கள், இலக்கியங்கள், நவீன படைப்பிலக்கியங்கள், நிகண்டுகள் உள்ளிட்டவற்றில் உள்ள சொற்களை தொகுத்து, அவற்றின் பொருள், பயன்படுத்தும் முறை, பயன்படும் இடம் உள்ளிட்டவற்றை பேரகராதியாக தொகுக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
அந்த வகையில், சென்னை பல்கலை தொகுத்த தமிழ் லெக்சிகன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதி, வின்ஸ்லோ அகராதி, ராட்லர் அகராதி, க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி, க்ரியாவின் மரபுத்தொடர் அகராதி போன்றவை சிறப்பாக உள்ளன.
இவற்றில், சுதந்திரத்துக்கு முன், சென்னை பல்கலை வெளியிட்ட தமிழ் லெக்சிகன், மிகவும் தரமும், நம்பிக்கையும் வாய்ந்தது. அதாவது, 1924 முதல் 1936 வரை ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்ட, சென்னை பல்கலையின் தமிழ் லெக்சிகன் தான், இந்திய மொழிகளிலேயே முதலில் தயாரான லெக்சிகன்.
இவற்றில், 1.24 லட்சம் சொற்கள் இடம் பெற்றன. இந்த அரிய பணிக்காக, இவற்றின் தலைமை பதிப்பாசிரியர் வையாபுரி பிள்ளைக்கு, பிரிட்டிஷ் அரசு, 'ராவ் பகதுார்' பட்டம் வழங்கியது.
அதைத்தொடர்ந்து, புதிய லெக்சிகன்களை உருவாக்க வேண்டும் என, உலக தமிழ் மொழி ஆய்வாளர்கள், சென்னை பல்கலை நிர்வாகத்திடம் வலியுறுத்திய நிலையில், 2003ல், யு.ஜி.சி.,யின் ஒப்புதலுடன், பேராசிரியர் ஜெயதேவன் தலைமையில், பழைய லெக்சிகன்களுடன் சேர்த்து, புதிய சொற்களை தொகுக்கும் பணி துவங்கியது.
இந்த பணிக்காக, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., 1 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை அந்த பணி முடியவில்லை. தங்களின் நுாலகங்களுக்காக சென்னை பல்கலை லெக்சிகனை வாங்க, பல்கலையை அணுகும் உலக தமிழ்ச்சங்க அமைப்புகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
கிடைக்கவில்லை
இதுகுறித்து, தமிழ்ச்சங்க அமைப்பினர் கூறியதாவது:
சென்னை பல்கலைக்காக, வையாபுரி பிள்ளை பதிப்பித்த, தமிழ் லெக்சிகன் கூட இப்போது கிடைக்கவில்லை.
மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென்னை பல்கலை, புதிதாக தொகுத்த லெக்சிகனையும், பழைய லெக்சிகனையும் புத்தகமாக வெளியிடுவதுடன், மின் நுாலாகவும், பல்கலை இணையதளத்தில் வெளியிட்டால், வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ள இயலும்.
எனவே, பல்கலை நிர்வாகம் புதிய தமிழ் லெக்சிகன் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, லெக்சிகன் தொகுப்பாசிரியர்கள் கூறுகையில், புதிய லெக்சிகன் உருவாக்கும் பணியில், மூன்று தொகுதிகள் தயார் செய்தோம். அவை குறைந்த அளவே அச்சிடப்பட்டன. 'நான்காவது தொகுதியை தொகுக்கும் பணி முடிவதற்குள், திட்டம் முடிந்து விட்டதாகக் கூறி, மேற்கொண்டு யு.ஜி.சி., நிதி ஒதுக்கவில்லை. எனவே, பணி முழுமை பெறவில்லை என்றனர்.

