வடமாநில மாணவர்களிடம் தமிழ் இலக்கிய தேடல் அதிகரிப்பு
வடமாநில மாணவர்களிடம் தமிழ் இலக்கிய தேடல் அதிகரிப்பு
UPDATED : பிப் 21, 2025 12:00 AM
ADDED : பிப் 21, 2025 09:36 AM
வாரணாசி:
மிகவும் தொன்மையான தமிழ் இலக்கிய வரலாறுகளை தேடும் ஆர்வம், வடமாநில பல்கலை பேராசிரியர்கள், மாணவர்களிடம் அதிகரித்துள்ளது என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், காசி தமிழ் சங்கமம் 0.3 நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மையக் கண்காட்சி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
இதுகுறித்து, செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநர் சந்திரசேகரன் கூறியதாவது:
ஆறாம் நுாற்றாண்டுக்கு முந்தைய இலக்கியங்களில் உள்ள தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட, 41 தமிழ் இலக்கிய நுால்கள் மற்றும் அகத்தியர் குறித்த நுால்களை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டார். அதேபோல், ஹிந்தி மொழியில் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில், பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே, மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் 3,000 பிரதிகளும், தொல்காப்பியம் 200 பிரதிகளும் விற்பனையாகின. மிகவும் தொன்மையான தமிழ் இலக்கிய வரலாறுகளை தேடும் ஆர்வம், வட மாநில பல்கலைகள், பேராசிரியர்கள், மாணவர்களிடம் அதிகரித்துள்ளது.
அகத்தியர் குறித்த ஆய்வு தேடல்களை வேகப்படுத்தி உள்ளோம். தமிழ் மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில், நான்கு மாத, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு, 300 ரூபாய் கட்டணம். மூன்று தேர்வுகள் நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

