தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு ஆங்கில புத்தகங்களால் அவதி
தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு ஆங்கில புத்தகங்களால் அவதி
UPDATED : ஜூலை 19, 2026 12:42 PM
ADDED : ஜூலை 19, 2026 12:44 PM
மறைமலை நகர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் தமிழ் வழி, பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய கல்வி மாவட்டங்களில், 816 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி என 2 முறைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
மாவட்டம் முழுதும் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 1.61 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச பாட புத்தகங்கள் பள்ளிகள் திறந்த அன்றே வழங்கப்பட்டன.
இதில் பல்வேறு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்க வழிக்கல்வி புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் குழந்தைகள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
தமிழ் வழியில் பயிலும் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மொழிப்பாடங்கள் மட்டுமே முறையாக உள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் ஆங்கில மொழியில் உள்ளதால் குழந்தைகள் படிக்கவும், வீட்டு பாடம் செய்யவும் திணறுகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் ஆப்பூர், சிங்கபெருமாள் கோவில், உள்ளிட்ட அரசு பள்ளிகளில் புத்தகங்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவ, மாணவியருக்கு உரிய புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
