UPDATED : ஆக 20, 2025 12:00 AM
ADDED : ஆக 20, 2025 08:28 AM
கோவை :
கட்டட வேலையில் ஈடுபடும் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை காக்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., மாநில பொதுச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட அறிக்கை:
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்கள் சீருடையுடன் கட்டடப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்; கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர். சமூக நீதி அரசு என்று சொல்லிக்கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சியில் தான் இந்த அவலம்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், உதயநிதி ரசிகர் மன்ற தலைவரைப் போல செயல்பட்டால், இப்படித்தான் நடக்கும். அவர், துறை சார்ந்த பணிகளையும் பார்க்க வேண்டும். கடந்த ஜூலையில் செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே, திறந்து மூன்றே மாதத்தில் அரசு பள்ளிக் கட்டடம் விழுந்து, ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம், இந்த துறையில் உள்ள லஞ்ச லாவண்யத்தையும், துறை அதிகாரிகளின் மெத்தனத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது. 2022ம் ஆண்டு, பள்ளி ஆய்வு திட்டம் கொண்டு வரப்பட்டது; அது தற்போது செயல்பாட்டில் இல்லை.
இவ்வாறு முருகானந்தம் கூறியுள்ளார்.