'நீட்' விலக்கு மசோதா நிராகரிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
'நீட்' விலக்கு மசோதா நிராகரிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
UPDATED : நவ 16, 2025 09:02 AM
ADDED : நவ 16, 2025 09:02 AM

புதுடில்லி:
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு தமிழக அரசு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
'நீட்' தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வழங்கிய பரிந்துரைகளின்படி, 'நீட்' விலக்கு மசோதா, 2021 செப்., 13ல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அந்த மசோதாவை, 2022 பிப்ரவரியில் தமிழக சட்டசபைக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார். அதே மாதத்தில், 'நீட்' விலக்கு மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றிய தமிழக அரசு, கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைத்தது. அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவனர் அனுப்பினார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க, கடந்த ஏப்ரலில் ஜனாதிபதி மறுத்தார்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு:
தமிழக அரசின் மசோதா மீது, 1,400 நாட்களுக்கும் மேலாக எந்த முடிவும் எடுக்காமல் ஜனாதிபதி தாமதம் செய்துள்ளார். நிராகரிப்புக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மசோதாக்கள் மீது அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மசோதாவிற்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் நிர்ணயிக்க முடியுமா என்பது தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி கேட்டிருந்த, 14 கேள்விகள் மீதான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.

