UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 09:04 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே செங்குளத்தில் அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழாவிற்கு தலைமை வகித்த கவர்னர் ரவி, தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் என்ற நுாலை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பாரதத்தில் வெவ்வேறு மொழி பேசுவோர், வெவ்வேறு இனத்தினர், உடை, உணவு கலாசாரங்களால் வேறுபட்டவர்களாக வாழ்ந்தாலும், நாம் அனைவரும் சனாதன குடும்பத்தினர் தான். சனாதன தர்மத்தில் வேறுபாடுகள் இல்லை. அதைத்தான் அய்யா வைகுண்டர் போதித்தார்.
பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், பிரதமர் மோடி யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை. தமிழகத்திற்கும் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார்.
மொழியை திணிக்கின்றனர் என்ற பொய்யையும், புரட்டையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் விதைக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் வென்றதாக சரித்திரம் கிடையாது.
மற்ற மாநில மாணவர்களை போல, விரும்பிய மொழிகளை தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது இளைஞர்களுக்கும், அவர்கள் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல.
இவ்வாறு கவர்னர் பேசினார்.