தமிழக பெண்கள் தான் டாப்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழக பெண்கள் தான் டாப்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
UPDATED : டிச 31, 2024 12:00 AM
ADDED : டிச 31, 2024 12:09 PM
துாத்துக்குடி:
துாத்துக்குடியில் நேற்று நடந்த ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்க விழா நடைபெற்றது.
விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியரைப் பார்க்கும்போது திராவிடன் ஸ்டாக்காக நான் பெருமைப்படுகிறேன். இதற்கு நேரெதிராக இருக்கும் இன்னொரு ஸ்டாக் நம்மை ஜாதி, மதம் எனச் சொல்லி பிரிக்க நினைக்கிறது.
வளர்ச்சியைப் பற்றி யோசிக்காமல், வன்முறை எண்ணத்தை துாண்டி விடும் வன்மம் பிடித்த அந்த ஸ்டாக் பெண்கள் என்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும். கடைசி வரை ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என மனுவாத சிந்தனையை இந்தக் காலத்திலும் பேசிக்கொண்டு திரிகிறது.
அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து, இன்றைக்கு தமிழக பெண்கள் இந்தியாவிலேயே டாப் ஆக இருக்கிறீர்கள். மதிப்பெண்கள் பெறுவதிலும், உயர்கல்வியில் அதிகமாக சேருவதிலும், அதன் பிறகு வேலைகளுக்கு செல்வதிலும் இந்தியாவிலேயே தமிழக பெண்கள் தான் டாப்.
இன்றைக்கு கல்வியைப் பொறுத்தவரை பெண்கள் தான் முன்னிலையில் இருக்கின்றனர்.
ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன் சமூக ரீதியாக, பாலின ரீதியாக படிப்புக்கு தடைக்கற்கள் இருந்தது. 1921ல், 92 சதவீத இந்தியப் பெண்களில் 100 பேரில் இரண்டு பேருக்கு மட்டும் தான் எழுத, படிக்கத் தெரியும். பெண்களை படிக்க வைத்தால் பண்பாட்டை இழந்து விடுவர் என்ற மூடத்தனமும், பிற்போக்குத்தனங்களும் கோலோச்சியக் காலம் அது.
விடுதலை
அதை மாற்றி, படித்தால் அறிவும், தன்னம்பிக்கையும் வரும் என புரிய வைத்து, கல்விக்கனவை எல்லாருக்கும் திறந்துவிட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.
விடுதலை பெற்ற 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டுகளில் மொத்தம் 68 கல்லுாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, 1969 முதல் 1975 காலக்கட்டத்தில் மட்டும், 97 அரசு கல்லுாரிகளை திறந்தார்.
ஏராளமான மருத்துவக் கல்லுாரிகளை உருவாக்கிய அவர், தலைசிறந்த மருத்துவக் கட்டமைப்புக்கு வித்திட்டார். அதனால் தான் இந்தியாவிலேயே மருத்துவர்கள் விகிதத்தில் தமிழகம் நம்பர் ஒன்னாக இருக்கிறது.
அந்த வரிசையில், கல்லுாரிக் கல்விக்கும், உயர்கல்விக்கும், ஆராய்ச்சிக் கல்விக்கும் திராவிட மாடல் அரசின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு நேரடியாக பணத்தை கொண்டு சேர்த்து, அவர்களுக்கான பொருளாதார விடுதலையையும், சமூக விடுதலையையும் உறுதி செய்கிறோம்.
கடந்த, 2021ல், ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியரின் உயர் கல்வி சேர்க்கை குறைவாக இருப்பதாக புள்ளி விபரங்களைப் பார்த்தேன். திறமையும், மனசும் இருந்தாலும், பணம் இல்லாததால் பெண்கள் மேல் படிப்பை கைவிடுகின்றனர் என தெரிந்து வருத்தமடைந்தேன்.
அப்போது தான், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கினேன். அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும் மாதம் 1000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இதுவரை 4.25 லட்சம் மாணவியர் பயனடைந்து உள்ளனர். அதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசுக்கு செலவினமாக கருதாமல், ஒரு தந்தைக்குரிய கடமையாக, பெண் குழந்தைகளுடைய கல்விக்கான மூலதனமாக தான் பார்க்கிறேன்.
மாதம் 1,000 ரூபாய் வழங்குவதால் கல்லுாரிகளில் மாணவியர் கூடுதலாக சேரத் துவங்கி இருப்பதாக, மாநில திட்டக்குழு அறிக்கையில் இருப்பதை கண்டு பெருமையாக இருந்தது.
இந்தத் திட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டது என பெருமைப்பட்டேன். பணம் இல்லாமல் படிப்பை நிறுத்திய பல்லாயிரக்கணக்கான மாணவியர் கல்லுாரிகளை நோக்கி வரத் துவங்கி உள்ளனர்.உங்களுடைய படிப்புக்குப் பணம் மட்டுமல்ல; எந்த தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன்.
அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வகையில் தற்போது புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளோம். தமிழகம் முழுதும் 75,000 மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப் போகிறோம்.
புதுமைப் பெண்
ஒரு ஆண் கல்லுாரிக்குள் நுழைந்தால் கல்வி வளர்ச்சி. அதுவே ஒரு பெண், கல்லுாரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. புதுமைப் பெண் திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியை முடிக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
இன்றைக்கு 1,000 ரூபாய் பெறக்கூடிய நீங்கள், நாளை உங்களைப் போல பலருக்கு உதவ வேண்டும். என்றாவது ஒருநாள் என்னை சந்தித்து, புதுமைப் பெண் திட்டத்தால் பயன் பெற்ற நான் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்று சொன்னால், அது தான் எனக்கு பெருமகிழ்ச்சி.
என் காலத்துக்குப் பிறகும் என் பேர் சொல்லும் பிள்ளைகளாக நீங்கள் எல்லாம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மகேஷ், கனிமொழி எம்.பி., மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.,க்கள் மார்கண்டேயன், சண்முகையா, தலைமை செயலர் முருகானந்தம், கலெக்டர் இளம்பகவத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.