பிற மொழிகளில் தமிழ் நுால்கள்: 100 பல்கலைகளுக்கு அனுப்ப முடிவு
பிற மொழிகளில் தமிழ் நுால்கள்: 100 பல்கலைகளுக்கு அனுப்ப முடிவு
UPDATED : செப் 02, 2024 12:00 AM
ADDED : செப் 02, 2024 09:49 AM

சென்னை:
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி; ஐஞ்சிறுகாப்பியங்கள் உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி; சங்க இலக்கிய நுால்கள் பத்துப்பாட்டு.
எட்டுத்தொகை, பதினெண் கீழ்கணக்கு நுால்கள்; நவீன கால நுால்களான புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வுகள் உள்ளிட்டவை, உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும், பல்வேறு காலக்கட்டங்களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியின் சிறப்பை, உலகம் முழுதும் பரவ செய்ய, பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள, தமிழ் நுால்களை, 100 பல்கலைகள் மற்றும் புகழ் பெற்ற நுாலகங்களில் இடம்பெறச் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது.
இத்திட்டத்தை செயல்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கூட்டம், சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கக கூட்டரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.
குழு உறுப்பினர்களான, தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன், திறனாய்வாளர் முருகேசபாண்டியன், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், ரோஜா முத்தையா நுாலகம் சுந்தர், மொழி பெயர்ப்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழில் இருந்து ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சீனம் போன்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நுால்களை தேர்ந்தெடுத்து, 100 பல்கலைகளுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கிய படைப்புகள் வரையிலான மொழி பெயர்ப்பு நுால் பட்டியலை தயாரித்து, இணையதளம் உருவாக்கி பதிவேற்றம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தமிழறிஞர்கள், திறனாய்வாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், இத்திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலகத்தில் கருத்துகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.