UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:38 AM

தஞ்சாவூர்:
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தில், மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சுமார் 25 ஆண்டுகளாகவும், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் இயங்கி வருகின்றன.
இத்துறைகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்களுக்கும், ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கும் தணிக்கைத் துறையில் தடை இருப்பதாகக் கூறி, தமிழக அரசு ஏப்ரல் மாதம் முதல் நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் என மொத்தம் 11 பேர் தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் நேற்று உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
பல்கலைகழகத்தில் நான்கு துறைகளும் பல ஆண்டுகளாக இருக்கும் நிலையில், படிப்புக்கான ஓப்புதல் பெறப்பட்ட நிலையில், நிதி துறையில் பல்கலைகழக நிர்வாகம் தணிக்கை துறையில் முறையாக அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், பலக்லைகழகத்தில் தொலைத்துார கல்வி, மானியத்தொகை இருந்ததை வைத்து சம்பளம் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தொலைத்துார கல்விக்கான வருவாய், மானியத்தொகை தற்போது இல்லாமல் போனதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், நான்கு துறைகளுக்கு அரசு தணிக்கை துறை சம்பளத்தை வழங்க முடியவில்லை என கூறி விட்டது. இது தொடர்பாக, சிண்டிக்கேட் கூட்டம் நடத்த பல்கலைகழகம் ஏற்பாடு செய்யவில்லை. அரசு தரப்பிலும் எந்த ஏற்பாடும் இல்லை. இதனால், தணிக்கைத் துறையில் உள்ள தடைகளை நீக்க முடியாமல் உள்ளது.
இந்த சம்பளம் பிரச்சனையால், குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மருத்துவச் செலவு செய்ய முடியாமல் உள்ளதால், நோயின் கடுமைக்கு ஆளாகி தவிக்கின்றனர். எனவே, தணிக்கைத் துறை தடையை நீக்கி, சம்பளம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.