UPDATED : பிப் 07, 2025 12:00 AM
ADDED : பிப் 07, 2025 12:12 PM

திருநெல்வேலி:
திருநெல்வேலி, கங்கை கொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையில், 4,400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் பவர் பேனல் தயாரிப்பு நிறுவனத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை, 11:00 மணிக்கு விமானத்தில் துாத்துக்குடி வந்தடைந்தார்.
அங்கிருந்து காரில் திருநெல்வேலி வந்தவர், ரோட்டில் நடந்து சென்று மக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார். பின், காரில் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டைக்கு சென்றார்.
அங்கு டாடா நிறுவனம், 4,400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்துள்ள டாடா சோலார் மின் உற்பத்தி பேனல் தயாரிக்கும் நிறுவனத்தை திறந்து வைத்தார். இந்நிறுவனத்தில், 3,000க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
இதில், 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பெண்கள். வாய் பேச இயலாதவர்களும் நுாற்றுக்கணக்கில் பணியாற்றுகின்றனர்.
மேடையில் ரத்தன் டாடா படத்துக்கு முதல்வர் மலர் துாவி மரியாதை செலுத்தினார். டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகர் காணொளி காட்சியில் பேசினார். முன்னதாக டாடா குழுமங்களின் செயல் தலைவர் பிரவீர் சின்ஹா வரவேற்றார்.
முதல்வர் ஸ்டாலின் ஆலையை முழுமையாக சுற்றிப்பார்த்தார். கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், புதிதாக விக்ரம் சோலார் பவர் நிறுவனம், 3,125 கோடி ரூபாய் மதிப்பில் துவங்க உள்ள சோலார் பவர் பேனல் தயாரிப்பு நிறுவனத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மாலை, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இருந்து மார்க்கெட் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் ரோடு ஷோவில் முதல்வர் பங்கேற்றார்.
தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட், நயினார் குளம் பூங்கா உள்ளிட்ட 66 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை திறந்து வைத்தார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார்.