புதுச்சேரியில் டிஜிட்டல் மயமாகிறது ஆசிரியர், மாணவர்கள் வருகை பதிவு
புதுச்சேரியில் டிஜிட்டல் மயமாகிறது ஆசிரியர், மாணவர்கள் வருகை பதிவு
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:06 AM
புதுச்சேரி :
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் வருகை பதிவு டிஜிட்டல் மயமாகிறது.
புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட அரசு துவக்க பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில், 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை, நோட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கல்வி ஆண்டு முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கொண்டுவரப்பட்டது. டிஜிட்டல் மயம் காரணமாக, காகிதம் இல்லாத நடைமுறை, ஒவ்வொரு துறையாக கொண்டு வருகிறது.
அதன்படி, கல்வித்துறை சார்பில், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவும், இனி டிஜிட்டல் மயம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக, பள்ளி கல்வி துறை சமக்ரா சிக் ஷா மாநில திட்ட இயக்குநர் தினகரன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் பாடம் சார்ந்த மற்றும் பாடம் சாரா திட்டங்களை மேற்கொள்ள, பள்ளியின் புள்ளி விபரங்களை கொண்டு முடிவு செய்ய ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், மாணவர்கள் வருகை, செயல்பாடுகள், ஆசிரியர்கள் விபரம், பள்ளி கட்டமைப்பு உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவு, ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும்.
இதற்கான PY SCHOOLS மொபைல் செயலி மற்றும் http://pudupallikalvi.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம், பதிவு செய்யலாம். இதனை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், ஆன்லைன் மூலம் மாணவர் வருகை பதிவு மேற்கொள்வதை வலியுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.