ஏழு நாட்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில் மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
ஏழு நாட்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில் மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
UPDATED : அக் 25, 2024 12:00 AM
ADDED : அக் 25, 2024 09:41 AM
தொண்டாமுத்தூர் :
கோவை மாவட்டம், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவனை அடித்த புகாரில், ஏழு நாட்களில் ஓய்வு பெறவிருந்த தமிழ் ஆசிரியை, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி, மூன்று ஆண்டுகளுக்கு முன் பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஆலாந்துறை பள்ளியில் போக்சோ வழக்கு உட்பட, 6க்கும் மேற்பட்ட புகார்கள் தொடர்ந்து வருகின்றன. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசிரியர் ஆனந்த குமார் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த, ஜீவா ஹட்சன் பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்தாண்டு, இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவனை, தமிழ் ஆசிரியர் பருவதம்மாள், பிரம்பால் அடித்ததாக புகார் எழுந்தது.
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவனின் பெற்றோர் புகார் தராததால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் இதே பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவனை, அதே தமிழ் ஆசிரியை பருவதம்மாள் அடித்துள்ளார். மாணவனின் பெற்றோர் சி.இ.ஓ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர்.
பேரூர் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினார். இதில், பருவதம்மாள், மாணவனை அடித்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மாணவனை அடித்த தமிழ் ஆசிரியை பருவதம்மாளை, சஸ்பெண்ட் செய்து சி.இ.ஓ., நேற்று உத்தரவிட்டார்.
ஏழு நாட்களில் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், பருவதம்மாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.